Search This Blog

Monday, August 15, 2011

கொங்குநாட்டுப் பழமொழிகள் காட்டும் வேளாண்மை

           நாட்டுப்புறமக்களின் வாழ்வில் இன்றியமையாத நிலையானதொரு இடம் வகிப்பவை பழமொழிகள். நாட்டுப்புறவியல் கூறுகளான கதை, கதைப்பாடல், பழமொழி, விடுகதை, கலைகள், நம்பிக்கைகள், மருத்துவம் போன்ற பலவற்றில் முக்கியமானதாகவும் மக்களின் மனத்தைச் சார்ந்த உணர்வு அடிப்படையில் அமைந்த மனித வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையதாகவும் அமைபவை பழமொழிகளே. "கொங்குநாடு" என்ற பகுதியில் வழங்கிய "வேளாண்மை" தொடர்பான பழமொழிகளை ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் கருத்தாகும்.

நாட்டுப்புறவியல்:-

      நாட்டுப்புற வழக்குகள் பற்றி உண்மைநிலையில் அறிவியல் முறையில் ஆராய்வது நாட்டுப்புறவியலாகும்.

   "Folklore" என்ற சொல் 1846 ஆம் ஆண்டு ஜான் தாமஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. மனிதனின் சடங்கு முறைகள், கதைப்பாடல்கள், பழமொழி, நாட்டுப்புறப்பாடல் ஆகியவற்றை இச்சொல் குறிப்பிடுவதாக அவர் விளக்கியுள்ளார்.

கொங்கு நாட்டின் பெருமையும், எல்லையும்:-

பெருமை:-
 1. கொங்கு நாடு பழமையும், பெருமையும் உடையது. சான்று: முதுமக்கள் தாழி  பழைய மட்பாண்டங்கள்.
2. மேலை நாடுகளோடு கொண்டிருந்த வாணிகத் தொடர்பு. சான்று: உரோமாபுரி நாணயங்கள்.

எல்லைகள்:-
     கொங்கு நாடு பல்வேறு மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதன் எல்லைகள்:

தென் எல்லை : பொதினி (பழனி வைகாவூர்)
மேற்கு எல்லை : வெள்ளிமலை
கிழக்கு எல்லை : குளித்தலை
வடக்கு எல்லை : பெரும்பாலை
   பெருமைமிகு கொங்கு நாட்டில் சிறப்புடன் வாழ்ந்த பெருமக்களின் வேளாண்மை சார்ந்த பழமொழிகளை ஆராய்வது பயனுடையதாகவே அமையும்.

பழமொழிகள்:-
      மனிதன் தோன்றிய காலந்தொட்டுப் பல்வேறு சூழ்நிலைகளைக் கடந்து காலமாற்றங்கள் பலவற்றைப் பெற்று நாகரிக நிலையைப் படிப்படியாக அடைந்துள்ளான். தான் பெற்ற அனுபவங்களைப் பிறர்க்கு உணர்த்த விரும்பிய மனிதன் "பழமொழிகள்" எனும் சுருங்கிய வடிவில் வெளிப்படுத்தினான். அவ்வாறு வெளிப்படுத்திய பழமொழிகள் 34 பெயர்களில் சுட்டப்படுகின்றன.

கொங்குப் பழமொழிகள்:-
         ஒவ்வொரு வட்டாரத்திலும் வேறுவேறு வகையான பொருளும் மக்களின் வாழ்க்கை முறைகளும் மாறிவரக் காணலாம். அவ்வகையில் கொங்கு வட்டாரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை, நாகரிகத்தோடு கூடியதாகவும் பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் ஏற்றம் உடையதாகவும் அமைந்துள்ளதைக் கல்வெட்டு, கோயில் சாசனங்கள் (கொழுமம் கல்வெட்டு, பட்டாலிக் கல்வெட்டு, தென்னிந்தியக் கோயில் சாசனங்கள்) ஆகியவை மூலம் தெளிவாக உணரலாம்.

பழமொழிகளில் வேளாண்மை:-
       மனத்தில் தோன்றிய ஒரு பொருளைத் தொடர்புடைய சொல்லோடு சேர்த்து பிறருக்கு விளங்க வைப்பதே மனிதனின் நோக்கமாகும்.

பழமொழிகள் அமையும் முறை:-
1. வேளாண்மைப் பழமொழிகளில் மாதங்கள்
2. பிள்ளை - பயிர்
3. பொருளாதாரம்
4. கருவிகள்
5. அறிவுரைகள் ஆகிய முறைகளில் பழமொழிகள் அமைந்து வரக் காணலாம்.
பழமொழிகளில் மாதங்கள்:-

     தமிழ் மாதங்களைக் கணக்கு வைத்துக் கொண்டு வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுவர், உழவு செய்வதற்கு ஏற்ற மாதங்கள்.
1. சித்திரை
2. ஆடி ஆகியவை அதனால் தான்.
1. சித்திரை உழவு பத்தரை மாற்றுத் தங்கம்
2. ஆடிப்பட்டம் தேடி விதை
என்ற பழமொழிகளைக் கையாண்டுள்ளனர்.
பிள்ளை - பயிர்:-
வளர்கின்ற குழந்தையையும், வளர்கின்ற பயிரையும் ஒப்பிடும் முறையை வேளாண் பழமொழிகளில் காணலாம்.
"இட்டதெல்லாம் பயிரா? பெற்றதெல்லாம் பிள்ளையா?" என்று கேட்டுச் சமாதனம் அடைகின்ற நிலையை இப்பழமொழி மூலம் அறியலாம்.
இடுகின்ற விதைகளெல்லாம் நல்ல பயிராக வளர்ந்து பயன்தருவதில்லை. அதுபோல் தான் பெற்ற பிள்ளைகளெல்லாம் பெற்றோர் கடமையைச் செய்வார்களென்ற நிலையைக் காண்பது அரிது என்பதே இதன் பொருளாகும்.
மேலும்,
"காட்டு வேளாண்மையையும்
வயிற்றுப் பிள்ளையையும்
எப்படி மறைக்கிறது?"
என்ற பழமொழி மூலம் சமுதாய மக்களிடம் சாதாரணமாக இவ்வொப்பீடு நடைமுறையில் வழங்கி வந்திருப்பதை அறியமுடிகிறது.
சிறிய வயதில் அனுபவமற்ற முறையில் பிள்ளைகள் செய்யும் காரியம் முழுப்பயனைத் தருவதில்லை.
"சிறு பிள்ளை இட்ட வெள்ளாமை
வீடு வந்து சேராது" என்ற பழமொழி இக்கருத்தை வலியுறுத்துகிறது.
பொருளாதாரம்:-
வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுபவர்க்கு இலாபம், நஷ்டம் ஏற்படுவது இயல்பு. சோர்ந்து போகாமல் மாற்றுப் பயிரை விளைவித்து இலாபம் பெறும் வழிவகையை,
"இஞ்சி இலாபம் மஞ்சளிலே" என்ற பழமொழி மூலம் அறிய முடிகின்றது.
ஓயாமல் உழைத்தாலும் பொருள் வரவு குறைவாகவே இருக்கும் நிலையை,
"உழுதவன் கணக்குப் பார்த்தால்
உழக்கால் தடியுங்கூட மிஞ்சாது" என்ற பழமொழி எடுத்துக் காட்டுகின்றது.
வேளாண்மைக் கருவிகள்:-
வேளாண்மைக்குப் பயன்படுத்தும் கருவிகள் சரியாக இருக்குமானால் விவசாயிகளுக்குத் தகுந்த பயனைத் தரும். இல்லையென்றால் நிலம் வீனாகிவிடும் என்ற நடைமுறை உண்மையை,
"கூளை குடியைக் கெடுக்கும்
குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்கும்" என்ற பழமொழி மூலம் அறியலாம்.
வேளாண்மை அறிவுரைகள்:-
நிலத்தைப் பாதுகாக்கும் முறையையும் விதைகளையிட்டுப் பயிர் விளைவிக்கும் முறையையும் மறைத்து வைக்காமல் எல்லோரும் பயன்பெரும் வகையில் கிராம விவசாயிகள் எடுத்து கூறினர்.
1. சிரைத் தேடின் ஏரைத் தேடு.
2. களை பிடுங்காத பயிர் கால் பயிர்
3. அடர விதைத்துச் சிதறப் பிடுங்கு
4. உழுகிற நாளில் ஊருக்குப் போனால்
அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
ஆகிய பழமொழிகள் வேளாண்மைத் தொழில் நுணுக்கங்களை வெளிப்படுத்துகின்றன.
கிராமப்புற மனிதனின் எல்லாச் செயல்களிலும் அவன் பெறும் அனுபவங்களே அவனுடைய வாழ்க்கையைச் சிராக்க வழிவகை செய்கிறது. மனித வாழ்வோடு பிரிக்கவொண்ணா நிலையைப் பழமொழிகள் பெற்றுள்ளன.
கொங்கு நாட்டு வேளாண்மை தொடர்பான பழமொழிகளையும், அப்பழமொழிகள் கிராமப்புற விவசாயிகள் வாழ்வில் பெற்றுள்ள சிறப்பிடத்தையும் ஆராய்ந்ததன் மூலம் கொங்குநாட்டு மக்களின் வாழ்க்கை முறையினைச் சிறப்பாக அறிய முடிந்தது உண்மை.